புத்தாண்டு இவ்வாறு சர்ச்சில் எனக்குப் பிறந்தது.ஹேப்பி 2011 என்று எமது சர்ச்சின் பாஸ்டர் புலியைக் கண்டு கிலி கொண்ட மனிதன் போல் பயங்கர டெஸிபலில் கத்தினார். அருகில் இருந்தவர்களுடன் கை குலுக்கிய போது ஊருக்குள் வெடிக்கப்படும் பட்டாசுச் சத்தம் கேட்டது.காற்று மண்டலத்தைக் காயப்படுத்தி புத்தாண்டை இப்படியெல்லாம் வரவேற்க வேண்டுமா ?
வீட்டிற்குப் போகும் வழியெல்லாம் எல்லா வீடுகளுக்கும் முன்னால் அழகழகான கோலங்கள்.எனது ஊரான கூடலூர் கிராமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு கிராநகரம்.அங்கு முன்பெல்லாம் ஆங்கிலப் புத்தாண்டை கண்டு கொள்ள ஆளே இருக்காது. நவீன கலாச்சார வளர்ச்சியில் வீட்டுக்கு வீடு உறங்காமல் கோலம் போடுகின்றனர்.
விடிந்தது. என் மனைவி பிரியாணி செய்யிற ஆர்வத்தில் இருந்தார்.நான் அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் இருந்தேன், பாழாப் போன அலுவலகத்தில் ஜனவரி ஒண்ணுக்குக் கூட லீவு கிடையாது. என் மனைவி "போய் தயிர் வாங்கட்டு வாங்க " என்றார். நானோ என் மயிரை எடுக்கும் முயற்சியில இருந்தேன். ஆமாம் நான் முகச் சவரம் பண்ணிக் கொண்டிருந்தேன்.இதனால் நான் தயிர் வாங்கப் போக முடியலை.உடனே என் இல்லாள் " யோவ் நீ எதுக்குமே லாயக்கில்லை " என்ற 2011 ன் முதல் சண்டையை வீரியமாகத் துவங்கினார். வருட ஆரம்பத்தில் சண்டை போட்டால் 2011 முழுக்கச் சண்டை போட வேண்டி வருமாமே , ஐ ஜாலி ,
இவ்வாறு மிகுந்த சிரமப்பட்டு என் மனைவி செய்த பிரியாணியில் உப்பே இல்லை. அவர் உப்பிட மறந்து விட்டாரா அல்லது என் மீது கொண்ட வெறுப்பினால் உப்பிடத் தயங்கினாரா ? ஆண்டவரே அறிவார்,